/Short Story

My Second Short Story - திருஷ்டிபொம்மை

ராமுவிற்கு காலையில் எழுந்தவுடன் அந்த பொம்மையைப் பார்த்தாகி விடவேண்டும். இல்லையென்றால் நாளே ஓடாது. தன் ஓட்டை குடிசைக்கு எதிரே அமைந்திருந்தது அந்த பிரமாண்டமான பங்களா. பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும் பளிங்கு கட்டிடம். ஆனால் ராமுவைக் கவர்ந்ததோ அதன் மாடியின் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த பொம்மை. வைக்கோலை நிறைத்து சட்டை பேண்ட் போட்டு மனிதனின் உடல் போல் அமைந்திருந்தது அந்த பொம்மை.

முகத்திற்கு பூசணிக்காய் வைத்திருந்தார்கள். அதில் கொடூரமான கண்களும், கோரமானபற்களும் பெரிய மீசையும் வரைந்திருந்தார்கள்.

அவனுள் ஒரு கேள்வி குடைந்துக் கொண்ட ேஇருந்தது, “ஏன் இவ்வளவு அழகான வீட்டு மாடில இப்படி அசிங்கமா ஒரு பொம்ம கட்டியிருக்காங்க?

அந்த பூசணிக்காயை இந்நேரம் பத்து ரூபாய்க்கு வித்திருக்கலாமே!” காய்கறி விற்பவரின் பிள்ளையாயிற்றே! மனமும் அவரைப் போலவே யோசித்தது.

ஒரு நாள் தன் அம்மாவிடம் கேட்டேவிட்டான், “அம்மா!”

“சொல்லு தம்பி!”, பத்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த கன்னியம்மா வேலையினூடே கேட்டாள்.

“ஏம்மா அவங்க வீட்டுல அந்த பூசணிக்காய் பொம்ம கட்டியிருக்காங்க?

“அது திருஷ்டி பொம்ம கண்ணு! அவங்க வீட்டு மேல எந்த நொள்ள கண்ணும் பட்டுடக்கூடாதுனு கட்டிவெச்சிருக்காங்க” என்றாள் அவன் தாய்.

“நம்ம வீட்டுல ஏம்மா கட்டல?”, அப்பாவியாய் கேட்ட மகனை முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்த கன்னியம்மா வாரி அணைத்துக்கொண்டாள். பஞ்சத்தின் சின்னமாய் விளங்கிய அவர்கள் குடிசையைக் காட்டி “இந்த வீட்டப் பாத்து யாரு தம்பி கண்ணு வெக்கப்போறா?” என்றாள். தாயின் கேள்வியை எற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு பதிலும் சொல்லத்தெரியாமல் அமைதியானான் ராமு.

அன்று மதியம் பள்ளி முடிந்து தொங்கட்டான் பாட்டியிடம் தேன்மிட்டாய் வாங்க நின்றான் ராமு. அருகில் எதிர் வீட்டில் குடியிருக்கும் ராஜா. ராமுவுடைய மிட்டாய் பங்காளி. பணக்கார வீட்டின் ராஜாவாக இருந்தாலும், அவன் உண்ணும் வெளிநாட்டு பண்டங்களிள் இந்த கடலைமிட்டாயின் சுவை இருக்கவில்லை. தினமும் பள்ளி முடிந்ததும் இங்கு ஆஜர் ஆகிவிடுவான். இப்படிதான் எதிர் வீட்டு ராமுவும் பழக்கம் ஆனான்.

தயங்கி தயங்கி தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ராமுவிடம் சென்றான் ராஜா. அவன் தோள்களில் கைப்போட்டுக்கொண்டு, “சொல்லு ராமு! என்ன வேணும்? மிட்டாய் வாங்க காசு இல்லயா?நான் வேணா வாங்கி தரட்டா?”, என்ற படியே தன் சட்டைப்பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தான் ராஜா.

“இல்ல ராஜா, அது, அது வந்து, அன்னைக்கு நீ புதுசா வாங்கினனு காட்டினல அந்த கலர் பெயிண்ட் டப்பா. அத எனக்கு இன்னிக்கு இரவலாக கொடுப்பியா? நாளைக்கு திரும்ப தந்திடுறேன்”.

“அட இவனே ! இத கேக்கவா அப்படி பயந்த ?” என்று கேட்டப்படியே தன் பையிலிருந்து அந்த கலர் டப்பாவை எடுத்துத்தந்தான் ராஜா. அதை எடுத்துக்கொண்டு உற்சாகமாக வீடு திரும்பினான் ராமு. அவன் தந்தை மறுநாள் வியாபாரத்திற்காக காய்கறிகளை எடுத்து வைத்து இருந்தார். அதில் பெரியதாய் ஒரு பூசணிக்காய் அம்சமாக அமர்ந்துக்கொண்டிருந்தது. அதை தன் கைகளால் உருட்டிக்கொண்டு வந்தான் அவன். அந்த வண்ணங்களை கொண்டு முகம் வரைய தொடங்கினான். அவன் அந்த பொம்மையை வரைந்து முடிக்கவும் அவன் தந்தை அவனை எட்டி உதைக்கவும் சரியாக இருந்தது.

கூறு கெட்ட கழுதை!, மண்ணில் கிடந்த மகனை கண்டு ஆவேசமாய் கத்தினார் கதிரேசன். என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்ப?”, மீண்டும் மகனை உதைத்தார். அதற்க்குள் ஓடி வந்த கன்னியம்மா தரையில் அழுதுக்கொண்டிருந்த மகனை வாரியணைத்தாள்.

“ஏன்யா துப்பு கெட்ட மனுஷா!பச்ச புள்ளனு பாக்காம ஏன் இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிற?” கூப்பாடு போட்டாள் கன்னியம்மா.

“அடி ஆக்கங்கெட்டவளே! பாத்தியாடி உம் புள்ள பண்ணியிருக்க காரியத்தை? அந்த பூசணிக்காயை இந்நேரம் பத்து கூறு போட்டு வித்திருப்பேன். முப்பது ரூபாய் கையில நின்னுருக்கும். அத விட்டுப் புட்டு திருஷ்டி பொம்ம வரைஞ்சி வெச்சிருக்கான். இத இனி நா எப்படி வியாபாரம் பண்ணுவேன்?”, என்று திட்டித்தீர்த்தார் கதிரேசன்.

தாயின் அரவணைப்பில் மெல்லியதாய் விசும்பிக் கொண்டிருந்தான் ராமு. “ஏன் டா தம்பி பூசணிக்காயில் படம் வரைஞ்ச? மகனிடம் கேட்டாள் கன்னியம்மாள். நம்ம வூட்டுக்கு எதுக்கு கண்ணு திருஷ்டி பொம்ம?” என்றாள் சிரித்துக்கொண்டே.

“இல்லம்மா. எதிர் வீட்டு ராஜா வீட்டிலே அவங்க அப்பா அவங்க கூடவே இல்ல. அம்மா அப்பா எதோ சண்டையில பிரிஞ்சுட்டாங்களாம். அவங்க அம்மாவும் வெளியூர் போய்க்கிட்டே இருப்பாங்களாம். ரொம்ப கஷ்டப்படுவான். யாரு கண்ணு பட்டுதோனு அவங்க வீட்டில இருக்க தாத்தா பொலம்பிக்கிட்டே இருப்பாராம். அப்படி நிம்மதி இல்லாம இருக்க வீட்டுலயே திருஷ்டி பொம்ம வெச்சிருக்காங்க. ஒன்னா, சந்தோஷமா நானும், நீயும், அப்பாவும் இருக்கோம். நம்ம வீட்டு மேல யாரு கண்ணும் படக்கூடாதுல. அதான் நம்ம வீட்டு வாசல்லயும் திருஷ்டி பொம்ம வெச்சேன்.”

விசும்பியபடி பேசிக்கொண்டிருந்த ராமுவை கண்ணில் கண்ணீரும், பெருமையுமாய் பார்த்துக் கொண்டிருந்தனர் அவன் பெற்றோரும்,அவன்கையால் உயிர்ப்பெற்ற திருஷ்டி பொம்மையும்

Krupa

Krupa

I am Krupa, a regular nutcase, with a crazy impulse to write lot of stories and poems. Am Indian, crazy, creative, bookworm, incurable romantic and insatiable Coffee lover.

Read More