பால் பொங்கும் நிலவொளியில்
தேன் யமுனா நதிக்கரையில்
கோதையவள் காத்திருக்க

கண்ணுக்குள் விழித்திருக்கும்
கருவிழியைப் போலிருக்கும்
கண்ணா வா அணைக்க

பூ குலுங்கி செழித்திருக்கும் பிருந்தாவனம்
அதை காண நாட்டமில்லா பேதை மனம்
உனக்காக உருகி நிற்கும் ராதை குணம்
கண்ணா ! நீ மூட்டாதே அவளுள் சினம்

வறண்டு விரிந்த பாலைநில மணலின் தாகம்
கூட அற்பமாய் தோன்றவைக்கும் அவளின் மோகம்
பூந்தென்றல் தொட்டாலும் நோகும் தேகம்
அவள் கண்கள் , சுமைதாங்க முடியாத கண்ணீர் மேகம்

சுட்டுவிட்ட தீ கூட நீ என்றுருகி
நிலவுமகள் கண்மயங்கி மாண்டாள் மருகி
செங்கமல இலைத்தண்ணீர் போல் நீ விலகி
போய் ஒரு திங்களானதடா, அவள் தேன் பால் பருகி

நீ வந்தால் வாழ்ந்து நிற்கும் அவளின் உயிரும்
அவள் துயர் கண்டு மருங்கி நிற்கும் செந்நில பயிரும்
அவள் காதல் தெரியாதோ கார்முகில் கண்ணா ?
வாராயோ !அவள் மனமாளும் மாண்புறு மன்னா