வசந்த காலம்

வசந்த காலம்

கை தொட்டால் சுருங்கிவிடும் சிணுங்கி இலைக்கில்லயடி
என் விரல் தொட்டால் உன் உடலில் சிலிர்த்து எழும் நாணம்
உன் இதழ் வழியும் அமுத ரசம் பருகியதின் பின்னே
துளிர் விட்ட வேம்பாக கசக்குதடி தேனும்.

அன்னம் போல் மரம் செதுக்கி பால் பஞ்சு தனை நிரப்பி
எழிலாய் நிற்கிறது இலவத்தில் மஞ்சம்
ஆனால் மேகத்தை பஞ்சாக்கி பூமெத்தை செய்தாற்போல்
இதமான உன் மடிதான் வேண்டுதடி நெஞ்சம்.

ஆவின் காம்பிருந்து கறக்கும் புதுப்பாலும் என்றும்
கொண்டதில்லை உன் போன்ற வாசம்
கானகருங்குயிலும் தான் பிறந்த நாள் முதலாய்
உன் குரலை இரவலாய் வாங்கிதான் பேசும் .

உனைப்பிரிந்து வாடும் துயர் போன்ற உயிர்வலியை
தந்ததில்லை எந்த ஒரு விஷக்கொடுக்கு தேளும்
உன் கரம் பற்றி நான் நடக்க வழியெல்லாம் பூ சிரிக்க
எப்பொழுது வருமடி காலம் ? வசந்த காலம்?